Pongu Tamizh Pongu Tamizh  

இரவியின் கையெழுத்து - நேராக நின்றவனின் துக்கம்!

இரவியின் கையெழுத்து - நேராக நின்றவனின் துக்கம்!
இரவி பரமேஸ்வரி

 

என்னையிட்டு எனக்கே வியப்பாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது. ஒரு வட்டம் சுற்றி வந்திருக்கிறேன்.

கொள்கையில் நான் பிறழ்ந்து விட்டேனா? நிலையான கொள்கை என எதுவும் எனக்கு இல்லையா? காற்றில் அல்லாடுகின்ற சருகா நான்? கடலில் அலைபடுகின்ற துரும்பா நான்?

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ந்த வேளை ஐ.பி.சி தமிழில் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) பணிபுரிகின்றேன். நிர்வாகத்தின் பணிப்பின் பேரிலும், எனது கொள்கை வழிப்பட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதாவது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். ஈழத்திலும் ஒலிபரப்பாகின்ற 'உறவுப்பாலம்' நிகழ்ச்சியில் எனது 'நாலு வார்த்தை' என்ற தயாரிப்பில் அதனைப் பதிவு செய்தேன். கூடிக் குரல் கொடுத்திருந்தார் யசோதா மித்திரதாஸ்.

அதற்கும் 15 வருடங்களுக்கும் முன்னர் 1989ஆம் ஆண்டில் ஒரு பொதுத் தேர்தல் நிகழ்ந்தது. இந்திய ஆக்கிரமிப்புப் படை அட்டகாசம் புரிந்த அந்தக் காலத்தில் அதன் மீதான என் கோபத்தை பதிவு செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசி பெற்ற ஈரோஸ் அணியினரின் வெளிச்சவீடு சின்னத்துக்கு புள்ளடியிட்டேன்.

எனக்குத் தெரிந்த என் அயலவர் என்பதனால் சிவமகாராஜா அவர்களுக்கு என் விருப்பு வாக்கை அளித்தேன். அப்போது என் மேலான கவலை என்னவென்றால் உதயசூரியன் சின்னமும் போட்டியில் இருந்தது. என்னை விட்டுப் போன பழைய காதலியைப் பார்த்த கவலையுடன் புதிய காதலியான வெளிச்ச வீட்டுக்கு மாலை சூட்டினேன்.

அதன் 12 வருடங்களுக்கு முன்னரான 1977 பொதுத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு ஐந்து கள்ள வாக்குகள் அளித்ததைப் பற்றி சென்ற கையெழுத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதுவே என் முடிந்த காதல் என்பதனால் அபரிதமான அன்பு உதயசூரியனில் எனக்கு இருந்தது. இதுவரை நான் கண்டவற்றுள் உதயசூரியனின் அழகை வேறெதிலும் கண்டதில்லை.

கண்டேன். உதயசூரியனின் அழகுக்கு ஈடாக அல்ல உதயசூரியனின் ஈர்ப்புக்கு மேலாக இன்னொன்றை அறிந்தேன். அது நட்சத்திரம். சிவப்பு நட்சத்திரம். தோழர் லெனினின் தொப்பியில், தோழர் சேகுவேராவின் தொப்பியில் இன்னும் பல முகம் தெரியாத உணர்வு ஒன்றான தோழர்களின் தொப்பியில் பளிச்சிடுகின்ற அந்த நட்சத்திரத்தை நான் பார்த்தேன். அவை பற்றி பின்னர் கையெழுத்திடுகின்றேனே!

1977இற்கு முன்னர் நிகழ்ந்த தேர்தல் 1970இல். சீனன் கலட்டிப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு படித்த காலம். அளவெட்டிக் கோயில்களில் திருவிழா தொடங்கப் போகின்ற, ஆனால் அயலூர் கோயில்களில் வேள்வி நடக்கின்ற காலம். கடுமையான வெய்யில் எறித்து உடம்பெங்கும் வேர்க்குரு பரவின காலம். அதை ஆற்ற அப்போது சோளகக் காற்றும் வரவில்லை.

அப்பாவின் முதுகில் பரவிய வேர்க்குருக்களை நான் கிள்ளினேன். அப்பா சாரம் கட்டி, முதுகைக் காட்டியபடி தலைவாசல் படியில் விசிறிக் கொண்டு இருந்தார். ஆசையாக, மெதுவாக ஒவ்வொரு பருக்களாக உடைத்தேன். சிறிது நீர் என் நகத்தில் படிந்தது. அப்பா கண் சொக்கிப் போய் இருந்தார். 'என்ன ராசா' என்று எல்லாம் முடிய அப்பா என்னைக் கொஞ்சினார். அப்பாவின் வாயில் சுருட்டு மணந்தது. எனக்கு ஓங்காளித்தது.

அப்போது சனி, ஞாயிறு என்று விடுமுறை கிடையாது. போயா, போயா முன்தினம் என விடுமுறை விட்டார்கள். அது ஒவ்வொரு கிழமையும் வந்தது. ஆனால் சனிக்கிழமைகளில் மாத்திரம் தான் வேள்வி. காலமை பத்து மணிக்கு எண்ணெய் அப்பி, ஒரு மணிக்கு அவிச்ச தேங்காய் பிரட்டி முழுகி, வந்தவுடன் சுட்ட உள்ளி தின்று, எலும்பு வைத்த இரசம் குடித்து, வேள்வி இறைச்சிப் பிரட்டலுடன் சோறு தின்ன அப்போது முடியவில்லை.

கொதித்த தார் உருகி ஓடுகிற மத்தியான வெய்யிலுக்குள்ளால் வந்து மீன் குழம்பு, தக்காளிக்காய் வெள்ளைக் கறியுடன் சோறு தின்கிற விசர்ச் சாப்பாடு மாதிரித்தான் வேள்வி இறைச்சியுடன் சோறு உண்பது.

ஓற்றைக்கண் ஈய்க்கப்பட்ட இள நுங்குகள் விழுகின்ற அந்தக் காலத்தில் ஒரு சனி கவுணாவத்தை வைரவர் கோயில் வேள்வி வந்தது. யாழ்ப்பாணம் முழுவதுமே வேள்வி இறைச்சி உண்கின்ற, கொழும்பில் உத்தியோகம் பார்ப்போரே வேள்வி இறைச்சி உண்ண வருகின்ற கவுணாவத்தை வேள்வி இறைச்சியை, அக்கோயிலின் ஒரு மைல் தூரத்தில் இருக்கின்ற எங்கள் வீட்டில் சமைக்க மாட்டார்களா?

இன்னும் சொன்னால் யாழ்ப்பாணத்தில் எங்கு வேள்வி நிகழ்ந்தாலும், மத்தியானம் இரண்டு மணியளவில், பிடரியாலும் மூக்காலும் நீர் ஒழுக ஓர் எலும்பை நான் உறிஞ்சுகிறேன். கவுணவத்தை வைரவர் கோயில் வேள்வி முதல் பெரிதென்றால் உரும்பிராய் காட்டு வைரவர் கோயில் வேள்வி அடுத்தது. பிறகு பிறகு நிறைய காட்டு வைரவர்களும், முதலியாரும், அய்யனாரும் யாழ்ப்பாணம் எங்கும் நிறைந்து இருக்கின்றார்கள்.

அத்தனை வேள்விகளுக்கும் மூத்த மாமா படங்கு விரித்து விசில், பலூன், அம்மம்மாக்குழல், பாப்பிள்ளை என்று வைத்து வியாபாரம் செய்யப் போகிறார். பெரிய பெட்டி கட்டிய சைக்கிளை படலையடியில் விட்டுவிட்டு இறைச்சிக் குடலைக் கொண்டு நொண்டி நொண்டி வருகிறார். பிலாக்கொட்டைகளும் மூத்த மாமாவிடம் இருக்கின்றன.

அந்த இறைச்சிக்குடல் ஐந்து ரூபா. அது பிறகு பத்தாகி, இருபதாகி, ஐம்பதுமாகும் வரைக்கும் மூத்த மாமா இறைச்சிக்குடலைக் கொண்டு வந்தார். அது நூறாகிற போது மூத்த மாமாவுக்கு என்ன நடந்தது. எங்கு போனார் என்பது எதுவும் தெரியாது. சிங்கள ஆமியின் ட்றக்குகள் றோட்டுக்களை உடைத்துக் கொண்டு தடதடத்து புழுதி பறக்க ஓடித்திரிந்தது. மூத்த மாமா குடியிருக்கிற வலித்தூண்டல் வழியேயும் போனது.

ஒரு கவுணாவத்தை வேள்வியில் அன்றுதான் அம்மாள் கோயிலுக்கு முன்னர் நடேசண்ணையின்ரை காணிக்குள்ளை வீப்பி என்றழைக்கப்படுகின்ற தோழர் வ.பொன்னம்பலத்தின் தேர்தல் கூட்டம் நடந்தது. நாங்கள் பள்ளிக்கூடம் முடிஞ்சு வாறம். வெய்யிலிலை இருந்து காப்பதற்காக அம்மா தொப்பியும், செருப்பும் வாங்கித் தந்திருந்தா. அதைப் போட்டுக் கொண்டுதான் வந்தன்.

இலாடி ஒழுங்கையால் வந்து அம்மாள் கோயிலடி றோட்டில் ஏறின போது வீரசிங்கண்ணை சைக்கிளில் வந்தார். காற்று சடக்கென அடித்த போது அவர் கட்டின சாரம் தூக்குப்பட்டது. உள்ளுக்கை எல்லாம் தெரிஞ்சுது. நாங்கள் எல்லாரும் சிரிச்சம். பாலன் கூக்காட்டிச் சிரிச்சான். 'ஆரடா அவன்' என்டு வீரசிங்கண்ணை சைக்கிளை விட்டு இறங்கினார். நாங்கள் ஓடிட்டம்.

நடேசண்ணையின்ரை காணிக்கை வீப்பியின்ரை கூட்டத்துக்காக மேடை போடப்படுது. லவுட்ஸ்பீக்கரிலை பாட்டு போகுது.

'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நம்நாடு என்னும் தோட்டத்திலே

நாளை மலரும் முல்லைகளே'

வீட்டிலை வேள்வி இறைச்சி தின்னத் தொடங்கின போதும் வேறை வேறை பாட்டுக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இறைச்சியுடன் இன்னும் சோறு தின்னாது இரவு வீப்பியின்றை கூட்டத்துக்கு நாங்கள் வந்திட்டம். சின்னராசன் மாமா, குமாரத்தான், சேகர் அண்ணை என்டு இளந்தாரிகளாக இருந்த எல்லோரும் தோரணம் மாதிரி சிவப்புக் கொடிகள், ரிசூப்பேப்பர் எல்லாம் கட்டி ஒட்டி நடேசண்ணையின்சை காணியைச் சிவப்பாக்கிச்சினம். கூட்டம் தொடங்கிட்டுது.

நாடகங்களைப் போடுற பெரியவிளான் மகான் அண்ணை ஒரு பாட்டுப் பாடினார். சீர்காழி கோவிந்தராஜன் பாடின 'குற்றால மலையிலே குதித்து வந்த தமிழே' என்ட பாட்டின்டை இராகத்திலை 'வாக்காளப் பெருமக்களே, அளவையூரு நன்மக்களே பற்றோடு சொல்வதையே கேளுங்கள் - எங்கள் பொன்னாவுக்கு வாக்குகளைப் போடுங்கள்' என்டு சொன்னார். அது முடிய மழை வந்ததிலை வீப்பியின்ரை பேச்சுக் கேட்க எங்களாலை முடியாமல் போச்சு.

ஆனால் எங்களின்ரை சப்போர்ட் கொங்கிரசுக்குத்தான். கொங்கிரசிலை எலெக்சன் கேக்கிற திருநாவுக்கரசு வீட்டை அப்பா ஒவ்வொரு நாளும் போனார். அவற்றை வீடு அளவெட்டியிலை கொம்பனிக் கடையடிக்கும் கேணிக்கரை வைரவர் கோயிலடிக்கும் இடையில் இருந்தது. அப்பா அங்கை இருந்து திருநாவுக்கரசுவின்ரை படம் போட்ட கனக்க நோட்டீஸ் கொண்டு வந்தார்.

நானும், சிவமும் சிரப்பைக்கை பச்சைமா கொதிதண்ணீ விட்டு பசை கிண்டி அந்த நோட்டீசுகளை றோட்டு வழிய ஒட்டினம். தார் உருகி இருந்ததாலை சில இடங்களிலை பசை பூசாமலேயே ஒட்டக் கூடியதாகி இருந்தது. சின்னமணியண்ணையின்ரை கள்ளுக் கொட்டில் பனையிலையும் ஒட்டினம். அப்படியே போய் கிராப்பிட்டி வைரவர் கோயில் சுவரிலையும் ஒட்டிப்போட்டு வர பனையிலை ஒட்டப்பட்டது கிழிபட்டிருந்தது. 'ஏன்? எண்டு சின்னமணியண்ணையிட்டைக் கேக்க 'அது காத்துக்கு கிழிபட்டிட்டுது' என்டார். காத்து எங்கையென்டாலும் நோட்டிசைக் கிழிக்குமே? மற்றது காத்து அப்ப வீசவும் இல்லையே!

நான் பனையிலை இன்னொரு நோட்டிஸ் ஒட்டப் போனன். 'வேண்டாம் தம்பி நான் கள்ளுக் கொட்டியிலை அரசியல் கதைக்கக்கூடாது என்டு சொல்லியிருக்கிறன்' என்டார். ஓகோ எனக்கு விளங்கிட்டுது. உவர் வீப்பியின்ரை ஆள். அதுதான் நோட்டிஸ் ஒட்ட விடமாட்டனெண்டிறார். எங்கன்ரை அம்பிகாபதி அத்தாச்சியின்ரை காணிக்குள்ள கள்ளுக் கொட்டிலைப் போட்டுக் கொண்டு எங்கன்ரை நோட்டீசை ஒட்டவிடுகிறார் இல்லை, என்ன? பொறு, அப்பாவிட்டைச் சொல்லுறன்.

தமிழ்க் காங்கிரஸ் மாநாட்டுக்கு யாழ்ப்பாணம் போனம். நிரம்பச்சனம். கூட்டம் நடந்தது. மழை தூறப் பார்த்தது. சனம் எல்லாம் எழும்பிச்சினம். 'ஒருத்தரும் எழும்பாதையுங்கோ. மழை இப்ப நிற்கும்' என்றார் ஜீ.ஜீ.பொன்னம்பலம். மழை நின்றது. 'பார்த்தீங்களே ஜீ.ஜீ.யின்ரை கெட்டித்தனத்தை' என்றார் அப்பா.

எலெக்சன் நாள் வந்தது. அளவெட்டி வடக்கிலை குமாரசாமியண்ணை குடும்பமும், சின்னத்துரையண்ணை குடும்பமும், மடத்தடி மாமா குடும்பமும், நாங்களும் மாத்திரம் தான் கொங்கிரஸ். தச்சு வேலை செய்த நாகமணி அண்ணை ஆக்களோ, மேசன் வேலை செய்த செல்லத்துரையண்ணை ஆக்களோ அப்பாவின்ரை சொல்லைக் கேட்கவில்லை. அவையள் வீப்பிக்கு போடப்போறம் என்டிச்சினம்.

வோட்டெல்லாம் போட்டு முடிஞ்சுது. பொழுது பட விசுவையா வீட்டை பால் வாங்கப் போனன். அங்கை அனாதரட்சனண்ணை நின்டார். 'சிவசிதம்பரம் சிதறி ஓடப்போறார்' என்டு நக்கல் அடிச்சார். அது எனக்குத் தான் என்டது வடிவா விளங்கிச்சுது.

அடுத்த நான் காலைமை கிராயிட்டி அத்தையும் நக்கலடிச்சா. 'என்னடா கொப்பர் ஜீ.ஜீ. மழை நில் என்டால் நிக்கும் என்டு சொன்னார். இஞ்சை எலெக்சனிலை மூண்டாவதா வந்து நிற்கிறார்.' எனக்கு ஆக வெக்கமாய்ப் போச்சு. ஜீ.ஜீ, இரண்டு சிவசிதம்பரம் எல்லாரும் தோத்துப்போய் நிக்கினம். எங்களின்ரை தொகுதியிலை திருநாவுக்கரசு கட்டுக்காசையும் இழந்திட்டார். முதல் செல்வநாயகம், பிறகு வி.பொன்னம்பலம், பிறகு சி.சுந்தரலிங்கம், கடைசியாத் தான் தா.திருநாவுக்கரசு.

ஆக நல்லூரிலையிருந்து சி.அருளம்பலம், வட்டுக்கோட்டையிலை இருந்து ஆர்.தியாகராசா, கிளிநொச்சியிலை இருந்து வீ.ஆனந்தசங்கரி என்ட மூன்டு பேருமே கொங்கிரஸ் கட்சியிலை இருந்து எம்.பி.ஆக வந்த ஆக்கள். எங்கன்ரை வீட்டு மேற்கூரையிலை சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை நிறத்திலான கொங்கிரஸ் கொடி பறந்து கொண்டிருக்கேலை. காத்து இல்லாததாலை சோம்பிப் போய் இருந்தது. நான் என்ன செய்தன்? ஏணி வைச்சு ஏறி அதைக் கழட்டிக் கொண்டு வந்து மடிச்சு பெட்டகத்துக்குள்ளை வைச்சன்.

எல்லாம் முடிஞ்சு எவ்வுளவோ காலங்கள் ஆகிவிட்டன. இப்போதுதான் கனாக் கண்டு எழும்புகிறேன். நான் பிறந்த பின் வந்த 1965, 1970 தேர்தல்களை விடலாம். அது விருத்தெரியாப் பருவம். விருத்தெரிந்த காலத்திலை என்ன செய்தேன்?

1977 - உதயசூரியன் சின்னம் (வாக்களிப்பு)

1989 – வெளிச்சவீடு சின்னம் (வாக்களிப்பு)

2004 – வீடு சின்னம் (ஆதரவுத் தளம்)

2010 – சைக்கிள் சின்னம் (ஆதரவுத் தளம்)

1965, 70இல் சைக்கிள். இப்பொழுதும் சைக்கிள். ஒரு சுற்றுச்சுற்றி வந்தேனா? இல்லை. இப்போதும் நம்புகிறேன்.

'நேராக' நின்றேன். சின்னங்கள் தான் மாறுகின்றன. நான் என் செய்வேன்?

4/4/2010 1:27:57 PM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்